தேவைப்படும் பொருட்கள்
பாஸ்மதி அல்லது சீரகசம்பா- அரை கிலோஇஞ்சி பூண்டு விழுது-4 ஸ்பூன்
சிக்கன் - அரைகிலோ
வெங்காயம்-3
தக்காளி-5
பச்சை மிளகாய்-3
பிரியாணி பொடி-50 கிராம்
தயிர்-ஒரு கப்
கொத்தமல்லி-அரை கப்
புதினா-அரைகப்
உப்பு-தேவைக்கு
எலுமிச்சை சாறு-3
ஆரஞ்ச் கலர்- சிறிதளவு
நெய்- 3 குழிகரண்டி
செய்முறை:-
சிக்கனை சுத்தம் செய்து தயிர் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயம் நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியை நான்காக நறுக்கவும். பச்சைமிளகாயின் காம்பு மட்டும் நீக்கவும். எலுமிச்சை சாறு எடுத்து தயாராக வைக்கவும். புதினா கொத்தமல்லி நறுக்கி வைக்கவும்.
அரிசியை உப்பு சேர்த்து அரைவேக்காடாக வடித்து வைக்கவும். பின் தனியாக ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். இவ்வாறு செய்தால் இன்னும் ஒட்டாமல் உதிரியாக வரும்.
நெய்யில் பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயத்தின் நிறம் மாறியதும் கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கவும். சுருங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு வாசனை போனதும் தக்காளியை சேர்த்து உடைக்காமல் கிளறவும்.
பின்னர் பிரியாணி பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.
பின்னர் ஊற வைத்த சிக்கனை சேர்த்து முக்கால் பதம் வேகும் வரை மிதமான தீயிலேயே வேகவிடவும். இறைச்சி விடும் நீரே போதுமானது. தேவைப்பட்டால் மட்டுமே நீர் சேர்க்கவும்.
சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் எலுமிச்சை சாறு கலந்து 2 நிமிடம் கிளறி விட்டும் பின் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சாதம் சிறிதளவு கொட்டவும். அதற்கு மேல் சிக்கன் கிரேவியை சிறிதளவு சேர்க்கவும். கொத்தமல்லி புதினா தூவவும்.இப்படியாக சாதம் முடியும் வரை அடுக்கடுக்காக செய்யவும்.
கடைசியாக மேலே சாதம் வரும்படி லேயர் உருவாக்கி சாதத்தின் மேல் ஆரஞ்ச் பொடி கலந்த நீரை ஆங்காங்கே ஊற்றவும். அல்லது வட்ட வடிவில் ஊற்றவும். பின் இதனை 5 நிமிடம் தம்மில் வைக்கவும்.
இறக்கும் போது நன்கு மூடியிட்டு ஒரு முறை மேலே உள்ள சாதம் கீழிறங்கும் படியாக குலுக்கவும். அவ்வளவு தான் லேயர் சிக்கன் பிரியாணி தயார். எள்கத்திரிக்காய் கிரேவி, வெங்காய ரைத்தா உடன் பரிமாறவும்.
கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:-
- கடைகளில் விற்கும் பிரியாணி பொடி உபயோகிக்கலாம். இல்லையேல் பட்டை,ஏலக்காய்,கிராம்பு,etc முதலிய வாசனை பொருட்களை பொடி செய்து அத்துடன் மிளகாய் தூளும் சேர்த்து வதக்க வேண்டும்.
- அவ்வாறு வீட்டிலேயே பொடி செய்வதாய் இருந்தால் நேர்பட்டையை உபயோகிக்கவும்.சுருள் பட்டையை விட நேர்பட்டை வாசம் கொடுக்கும்.
- பட்டையை லேசாக ஓரத்தில் கடித்தால் இனிப்பு சுவையுடன் சட்டென காரத்தன்மை கொடுத்தால் அது தான் தரமான பட்டை வகை. அப்படியுள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
- அடிக்கடி கரண்டி உபயோகிக்க வேண்டாம். சாதம் உடைந்துவிடக் கூடும்.
- நாட்டு தக்காளி நல்ல புளிப்பு சுவை கொடுக்கும். கிடைக்கவில்லை என்றால் பெங்க்ளூர் தக்காளி 1 அல்லது 2 அதிகமாக சேர்க்கவும்.
- பச்சை மிளகாயை நறுக்க தேவையில்லை. காம்பு மட்டும் நீக்கவும். அதுவே போதுமான காரம் கொடுத்துவிடும்.
- நெய் அதிகம் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் குறைத்துக்கொள்ளலாம். அல்லது பாதி ரீபைண்ட் ஆயில் சேர்க்கலாம். டால்டா சேர்க்க வேண்டாம்.
- எலுமிச்சையை அதிகமாக பிழிய கூடாது. லேசாக சாறு வரும்வரை மட்டும் பிழியவும். ஏனென்றால் கசப்பை ஏற்படுத்தும்.
- வெறும் கொத்தமல்லி இலை, புதினா இலை மட்டும் எடுக்காமல் தண்டும் சேர்க்கவும். அதாவது கொத்தமல்லி (வேரை தவிர),புதினா (கடினமான தண்டு தவிர) கடைசி வரை ஆய்ந்து உபயோகிக்கவும். தண்டும் வாசனை கொடுக்கும் என்பதால்.
தம் போடும் முறை:-
தீயை சிம்மில் வைத்து, அதன் மேலே தோசைகல்லை வைத்து, அதன் மேலே பிரியாணி பாத்திரத்தை வைத்து மூடியிட்டு, மூடியின் மேல் தண்ணீர் உள்ள பாத்திரத்தை வைக்க வேண்டும்.இப்படி தான் தம் போடணும். சரியா 5 லிருந்து 10 நிமிடம் வரை சிறுதீயில் இருக்கணும் (அல்லது பாத்திரத்தில் நீர் வற்றியதும் சிர்சிர்ன்னு மெல்லிய சவுண்ட் கேக்கும். அப்ப அடுப்ப அணைச்சுடுங்க). இறக்கியதும் மூடியை திறக்காமல் 10 நிமிடம் கழித்து அல்லது பரிமாறும் போது திறங்க.
*****************
இப்படி இல்லாமல் சிறுதீயில் தோசைகல்லை வைத்து அதன் மேலே பிரியாணி பாத்திரத்தை வைத்து பாத்திரத்தின் வாய் பகுதியில் பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவு கொண்டு அப்பி(பசைபோல் பாவித்து) மூடியிடலாம். இவ்வாறு தான் ஹைதரபாத் பிரியாணி தம் போடுகிறார்கள்.
22 comments:
வணக்கம் சகோ..
பக்ரீத் ஸ்பெஸல் பிரியாணியா ?
நன்றி சகோ பகிர்விற்க்கு..
தங்களுக்கு இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
நட்புடன்
சம்பத்குமார்
சூப்பர்,இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்..
Dearest Amina
EID MUBARAK to You and your family with all best wishes.
இனிய இரவு வணக்கம் அக்கா,
அருமையான + சிம்பிளான சமையற் குறிப்பினைத் தந்திருக்கிறீங்க.
நானும் டைம் கிடைக்கும் போது அம்மாவிடம் காண்பித்து சிக்கன் லேயர் புரியாணி செய்து சாப்பிட ட்ரை பண்றேன்.
மிக்க நன்றி!
பக்ரீத் பிரியாணி...சென்னைல உங்களுக்கு தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி பார்சல் அனுப்புங்க.
நிரூபன் மட்டும் அக்கான்னு சொல்றாரு. என்னான்னு கேளுங்க.
// நிரூபன் மட்டும் அக்கான்னு சொல்றாரு. என்னான்னு கேளுங்க.
//
அவர் எனக்கு தம்பி வயசு :-)
லேயர் பிரியாணி ரொமப்வே மணக்குது,
இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..
படத்தையும், செய்முறையும் போட்டு கடுப்பேத்துறீங்க. இதெல்லாம் கொஞம் கூட நல்லா இல்லை சகோ.
ஆஹா...அருமை....
இப்பவே சாப்பிடனும் போல இருக்கே.....
வாழ்த்துக்கள் ஆமினா....???
பெருநாள் எப்படிப் போச்சு....
பயனுள்ள குறிப்புகளுடன்,நல்ல பிரியாணி, நன்றி ஆமினா
அஸ்ஸலாமு அலைக்கும், அருமை நன்றி
mm.. Finger licking dish... superb :-)
super
ஆமினா மேடம்,
பிரியாணி படத்தைப் பார்க்கும்போதே நாவூறுகிறது. அடுத்த வார இறுதியில் செய்து பார்க்க மிகவும் விருப்பம்.
1.வெங்காயம்(3),தக்காளி(5),தயிர்(ஒரு கப்) போன்றவை கிராம் அளவில் தந்து உதவ இயலுமா.
2. //எலுமிச்சைசாறு - 3// என்று கொடுத்துள்ளீர்கள்
3 டீஸ்பூன் அளவா (அல்லது) 3 மேஜைகரண்டி அளவா.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் தருவீங்களா மேடம்.எங்களுக்கு செய்து பார்ப்பதற்கு உதவியாக இருக்கும்.
இப்போது தான் உங்கள் சுவையான குஸ்காவை சாப்பிட்டு,பின்னூட்டமும் கொடுத்தேன்.உங்கள் குறிப்புகள் மிகவும் சுவையாக உள்ளன.செய்து பார்க்கும் ஆவலைத் தூண்டுகின்றன.நன்றி.
வாங்க ராஜ்
//1.வெங்காயம்(3),தக்காளி(5),தயிர்(ஒரு கப்) போன்றவை கிராம் அளவில் தந்து உதவ இயலுமா.//
ராஜ் நீங்க இப்படியாக அளவு கேட்பதற்கு பதில் சிம்பிளான விஷயம் செய்யுங்க! எப்பவும் நார்மலான சைஸில் எடுங்க. கூடினாலும் குறைந்தாலும் சுவையில் மாற்றமே வராது.
ஒரு கப் என்பது 250 கிராம் என்ற அளவில் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்
//
2. //எலுமிச்சைசாறு - 3// என்று கொடுத்துள்ளீர்கள்
3 டீஸ்பூன் அளவா (அல்லது) 3 மேஜைகரண்டி அளவா.//
3 பழங்களை எடுத்து அதில் இருந்து வரும் சாறினை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எலுமிச்சை கிடைக்காது என்றால் 1 1/2 மேசைகரண்டி சாறு ஊற்றுங்கள்
நன்றி ராஜ்
ஆமினா மேடம்,
இந்தியாவில் கிடைப்பதை compare பண்ணும்போது இங்கு தக்காளி மற்றும் வெங்காயம் மிக மிக பெரிய sizeல் இருக்கிறது.எண்ணிக்கை அளவில் குழப்பமாக இருக்கிறது.அனுபவசாலிகள் கண்ணளவில் செய்துவிடுவார்கள்.ஆனால் எங்களைப் போன்றோர்க்கு சிரமம். நாங்கள் இதற்கு முன்பு recipes பண்ணும்போது வெங்காயம்,தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களை கூட குறைய போட்டு சொதப்பிவிடுவோம்.taste வராது,things waste,அதற்குப்பிற்கு சமைக்க ஆர்வமே வராது.
உங்கள் குறிப்புகளைப் பார்க்கும்போதே ரொம்ப ரொம்ப ஆசையாக இருக்கும் செய்து பார்க்க,ஆனால் நாங்களேதான் இங்கே செய்தாக வேண்டிய சூழ்நிலை,அதுவும் ஞாயிறு மட்டும் தான் time கிடைக்கும்,அன்று சமைத்துப் பார்க்க ஆவலாக இருக்கும். ஆனால் நாங்களாக கண்ணளவில் போட்டால் சரியாக வராது,அதனால் தான் கிராம் அளவு என்பது standard அளவு.நீங்கள் உங்கள் அனுபவத்தில் சொன்னால் சுவைபட செய்து பார்க்க வசதியாக இருக்குமே என்றுதான் கேட்டேன்.மேலும் உங்கள் recipeல் சந்தேகம் கேட்பதால்,உங்கள் அனுபவத்தில் சொல்லி எங்களை ஊக்கப்படுத்துவீர்கள் என்று நினைத்தேன்.ஆனால் நான் கேட்டதை நீங்கள் தொந்தரவு என எண்ணுகிறீர்கள் என எண்ணுகிறேன்.
அடுத்த வார இறுதியில் ஒரு சின்ன friends get together இருக்கிறது.உங்களால் முடிந்தால் இந்த ஒருமுறை மட்டும் சொல்லுங்கள்,சிறப்பாக நாங்கள் செய்வதற்கு.இனிமேல் கேட்கமாட்டேன்.
//1.வெங்காயம்(3),தக்காளி(5),தயிர்(ஒரு கப்) போன்றவை கிராம் அளவில் தந்து உதவ இயலுமா.//
இதுவரை எனக்கு பதிலளித்ததற்கும்,உங்களின் சுவையான குறிப்புகளுக்கும் மனதார்ந்த நன்றி.
நான் எழுதியதில் தவறு ஏதும் இருப்பின் உங்கள் தம்பி போல் நினைத்து என்னை மன்னித்துவிடுங்கள்.
ஐய்யோ ராஜ்
நான் தவறாக நினைக்கவே இல்லை. நீங்கள் தேடி வந்து சந்தேகம் கேட்பது மனதிற்கு மிக்க மகிழ்ச்சியான விஷயம் தான். எனக்கு வெளிநாடு பற்றி தெரியாது! அங்கு விற்கும் பொருட்கள் பற்றியும் தெரியாது.
நான் அப்படி சொன்னதுக்கு காரணம் இணையத்தில் என் சமையல்களை மட்டும் நீங்கள் செய்யபோவதில்லை இல்லையா? வேறு எங்கேனும் நல்லதொரு சமையல் குறிப்பை பார்த்துவிட்டு அதில் சில அளவுகள் துல்லியமாக தெரியவில்லை என்றால் (சந்தேகம் போக்க பதில் சொல்லவில்லை என்றால்) நீங்கள் செய்வது தடை படும் தானே? அந்த அர்த்தத்தில் தான் அப்படி சொன்னேன். நேத்து கொஞ்சம் வேலை பிசி என்பதால் வேகவேகமா டைப் பண்ணினேன். இல்லைன்னா காரணத்தையும் சொல்லியிருப்பேன். ஸ்மைலி போட்டிருந்திருந்தா இந்த குழப்பம் வந்திருக்காது! :'( சாரி!
நிச்சயமா இனி எந்த சந்தேகம் என்றாலும் கேளுங்க நீங்க என் தம்பி என்றால் !
///1.வெங்காயம்(3),தக்காளி(5),தயிர்(ஒரு கப்)//
தயிர்- 250 கிராம்
வெங்காயம்- 250 கிராம்
தக்காளி- 300 கிராம்
உங்களின் பதிலுக்கு மனதார்ந்த நன்றி ஆமினா அக்கா.
பிரியாணியும்,உங்கள் எள் கத்திரிக்காய் கிரேவி,ரெய்தா தான் இன்று lunchக்கு.பிரியாணி சூப்பர்,அலாதியான சுவை. எள் கத்திரிக்காய் கிரேவி எப்போதும் போல் favourite தான்.
பிரியாணி எனக்கும்,என் friends க்கும் மிகவும் பிடித்திருந்தது,செய்த அனைத்தும் காலி,விருப்ப உணவாகிவிட்டது.கூட செய்திருக்கலாமே என்று நினைத்தோம். எங்கள் அனைவரின் சார்பாக உங்களுக்கு நன்றிகள்.
எள் கத்திரிக்காய் கிரேவி மீதி fridgeல் வைத்திருக்கிறோம்.நாளை இதே பிரியாணி தான் மீண்டும் செய்யப்போகிறோம்.
சுவையானதொரு குறிப்புக்கும்,செய்து பார்க்க பதில் தந்து உதவியதற்கும் நன்றி அக்கா.
மறக்காம பதில் போட்டதுக்கு நன்றி ராஜ்
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...
நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…
எனது துணைவியாருக்கு மேலும் ஒரு தளம் கிடைத்து விட்டது...!
Post a Comment